Saturday 11 May 2013

திரிகோணமலை நல்லியக்கோடர்.


தமிழர் வாழும் இடமெல்லாம் முருகவழிபாடு உண்டு.

ஈழ நாட்டின் திரிகோண மலைப்பகுதி தமிழர் வாழும் பகுதி. அங்கு கடைச் சங்க காலத்தில் ஒரு குறுநில மன்னர் ஆண்டு வந்தார். அவர் பெயர் நல்லியக்கோடர்.

தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு எனப் பட்டது. தொண்டை நாட்டிலுள்ள எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், மூதூர் ஆகிய நகரங்களை நல்லியக்கோடர் கைப்பற்றினார். அங்கு கோட்டைகள் அமைத்து அரசு புரிந்தார். இவரது குலதெய்வம் குமரக் கடவுள்.

புலவர் நந்தத்தனார் நல்லியக்கோடர்மீது பாடியது சிறுபாணாற்றுப்படை என்னும் நூல். இது சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் ஒன்றாகும். நல்லியக்கோடர் புலவர்க்குப் பரிசிலாக யானைக் குட்டியும் வளநாடும் பொற்குவியலும் வழங்கிப் போற்றியுள்ளார்.

நல்லியக்கோடர் புகழ் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றதை அறிந்தனர் மூவேந்தர். அவர்கள் உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டது. மூவேந்தரும் நல்லியக்கோடர் மீது திடீர் படையெடுப்பு நடத்தினர்.

"முருகனை நம்பினோர் முழு வெற்றி பெறுவர்' எனும் கொள்கையுடையவர் நல்லியக்கோடர். அந்த நம்பிக்கையோடு தன் படைகளுடன் மூவேந்தரை எதிர் கொண்டார்.

நல்லியக்கோடரின் கெடுமதி கொண்ட அமைச்சர் பகைவருக்கு உளவு சொல்லியதனால் நல்லியக்கோடரின் படைகள் மூவேந்தர் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிதறின.

தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்தார் நல்லியக்கோடர் இரவோடு இரவாக மனைவியுடன் வேலூர் சென்று முருகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்தார்.

"ஐயனே, தோல்வியால் மானம்ழிந்தபின் இனி உயிர் வாழேன்'' என்று கூறிவிட்டு அயர்ந்து விட்டார். கனவில் கந்தவேள் கைவேலுடனும் மயிலுடனும் காட்சி தந்து

"நல்லியக்கோடனே, யாமிருக்க பயமேன்? வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை. நீ நீராடும் கேணி நீரில் பூக்கும் ஒற்றைத் தாமரை மலரைப் பறித்து எமது ஆறெழுத்து மந்திரத்தை (ஓம் சரவணபவ) சொல்லி பகைவர்மீது வீசி எறிவாயாக''

என்று திருவருளாணையிட்டு மறைந்தார்.

எழுந்த நல்லியக்கோடர் புத்துணர்ச்சி பெற்று போர்க்களம் சென்றார்.

வள்ளிமணாளன் முருகன் சொன்னபடி கேணியில் பறித்த தாமரை மலரை பகைவர் மீது வீசினார். மலரே வேலாக மாறியது. பகைவர் தலைகளைச் சாய்த்தது. அவனது போர்ப்படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடித்தது.

"அம்மலர் அயிலென அணுகி ஆங்குள
வெம்மைசேர் படைகளை வீட்டி தெவ்வர்கள்
தம்முழி அமைச்சன் தன் தலையைக் கொய்து உயர்
செம்மனக் கோடன்தன் திருக்கை சேர்ந்ததே'
என்கிறது பாடல்.
அயில்- வேல்;
வீட்டி- அழித்து;
தெவ்வர்கள்- பகைவர்கள்;
கொய்து- பறித்து.

வேலாக மாறிய தாமரை மலர் பகைவர்களை அழித்து, கொடிய அமைச்சர் தலையை வெட்டி நல்லியக்கோடர் கையில் சேர்த்தது!

நல்லியக்கோடரைக் காக்கும் வேல் கொடிய அமைச்சனைத் தாக்கும் வேலாகியது. கடவுள் கை ஆயுதங்கள் என்றுமே நல்லோருக்குத் தீங்கு செய்யாது. எனவே அவற்றிற்கு கொடியோர்தான் அஞ்ச வேண்டும். அதிலும் மனந்திருந்திவிட்டால் அவர்களையும் வாழ வைக்கும் வேலாயுதம் என்பதற்கு மயிலாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூரபத்மனே சான்று!

பொறாமைத் தீ மூவேந்தர்க்கு தோல்வியைத் தந்தது. குறுநில மன்னர் நல்லியக்கோடரிடம் பணிந்தனர் மூவேந்தர்.

தனக்கு வெற்றி தந்த வேலவனுக்கு நல்லியக்கோடர் ஓர் ஆலயம் எடுத்தார். அந்த ஊர் பெயரும் அன்று முதல் வேலூரானது.

---வாரியார் சுவாமிகள் கூறியதை ஆதாரமாய்க் கொண்டு எழுதப்பட்டது. நன்றி

No comments:

Post a Comment